பெருநிழலாய்த் தொடரும் போர்

காலம் கைவிரித்தபடி எதுவுமே நடக்காதது போல் பயணித்து விடுகிறது.  பத்து ஆண்டுகள்….. நமது கனவுகள் சிதைக்கப்பட்டு, எம் உறவுகள் குதறப்பட்டு எமக்காக நாமே அன்றி வேறொருவருமில்லை என்று உணர வைத்த முள்ளிவாய்க்கால் அனர்த்தங்கள் நிகழ்ந்து பத்து ஆண்டுகள் ஓடிச் சென்று விட்டன.  முள்ளிவாய்க்கால் அனர்தங்களின் போது ஆயிரமாயிரம் துயர் கதைகள் எம்மவர்களுக்கு நிகழ்ந்தன. அவற்றினை உலக அரங்கினில் வெளிக்கொணர வேண்டிய பாரிய பொறுப்பு எம்மவர்க்கு உண்டு. இந்த வகையில் ஊடகங்களுக்கும் கலை இலக்கியம் சார்ந்து செயல்படுகின்ற படைப்பாளிகளுக்கும் பொறுப்பும் கடமையும் நிறையவே உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது, யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அறுபது ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் உலக சினிமாவில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  இந்த அறுபது ஆண்டுகளிலும் சொல்லித் தீராத கதை அவர்களது. அந்தக் கொடுமைகளைப் போலவே, எங்கள் மண்ணில் எங்கள் உறவுகளுக்கு நிகழ்ந்த சோகங்களும் சொல்லப்பட வேண்டியவை. எங்களுக்கான சினிமா என்று இப்போது பலரது உழைப்புக்கள் முன்னேற்றத்துடன் உதிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்த உழைப்பின் ஒர் சிறு படிக்கல்லாகவே ‘பொய்யா விளக்கு’ இருக்கும் என்பது எமது நம்பிக்கை.

கொத்துக் குண்டுகளுக்குள் எம் சொந்தம் அந்த வெட்ட வெளியில் செத்து மடிந்து கொண்டிருக்கும் போது,  காயம் பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான அத்தியாவசிய மருந்துகளையே அரசு தர மறுத்த வேளையில, தமது உயிருக்கே சிறிதும் உத்தரவாதமில்லாத நிலையில் மக்களுக்காக அந்த போர்க்களத்தில் நின்றிருந்த மருத்துவர்களை நாம் மறந்து விடலாகாது.  அவர்களில் ஒருவரின் கதையினை எடுத்து வருகின்றது ‘பொய்யா விளக்கு’. போர்க்களத்தில் நின்று மக்களுக்குச் சேவையாற்றிய வைத்தியர்களை, ஒரு அரசானது கொண்டாடியிருக்க வேண்டும்.  அதை சிறீ லங்கா அரசிடம் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவர்களைச் சிறையிலடைத்துத் துன்புறுத்தியதை எவருமே மன்னிக்க முடியாது.

சுயநலமற்று யுத்த நிலத்தில் கொத்துக் குண்டுகளுக்குள்ளும் துப்பாக்கிச் சன்னங்களுக்குள்ளும் நின்றவாறு நிராதரவாக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்த வைத்தியர்களின் துளிக்கதைகளும் நெஞ்சை உருக்குவதாக இருக்கின்றன.  இவற்றின் ஒரு சிறிய பகுதியையேனும் வெளிக்கொணர்வதற்கு நாம் சிறிய விளக்கொன்றினை ஏற்றி வைக்கவுள்ளோம் என்பது நிறைவாக உள்ளது.

போர்

தவிர்த்து

நீள்பயணம் நடந்து

நெடுநாள் கழிந்தும்

காலடிக்கீழ்

பெருநிழலாய்த் தொடர்கிறது

போர்

என்ற மறைந்த கவிஞர் திருமாவளவனின் கவிதையினைப் போலவே போரின் வலிகள் எம்மை விட்டு அகலப்போவதில்லை. அப்படியிருக்கையில் எமது படைப்புக்களும் அந்தப் போரின் அவலங்களைச் சொல்வனவாகவே இருக்கின்றன என்பது சமீப காலங்களாக உருவாகிவரும் எம்மவரின் படைப்புக்களில் தெரிகிறது. இதனையும் தாண்டி தரமான கலைப்படைபுக்களாகவும் உலக சினிமாவாகக் கொண்டாடப்படப் போகின்ற பல படைப்புக்கள் இனி வரும் காலங்களில் வரும் என்பது கண்கூடு.  இதற்கான சமூகப் புரிதலும் ஆதரவும் புலம்பெயர் மக்களிடமிருந்து கிடைக்கவேண்டும்.

குடும்பச் சூழல், பொருளாதாரம் என்று சுமைகளையெல்லாம் இறக்கி வைத்துவிட்டு படைப்பாளிகளாக எம்மவர் புறப்படுகையில் நிகழ்ந்து விடுகின்ற சிக்கல்களையெல்லாம் சமாளித்து, எங்களின் படைப்புக்களை நாங்களே தட்டிக் கொடுக்க மறுக்கின்ற தளத்தில், ஒருவாறு முட்டி மோதிச் சில படைப்புக்கள் வெளி வருகின்றன.  அதற்கான உழைப்பு எங்கள் மக்களால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அந்த நாட்கள் அண்மித்தே வருகின்றன என்பது மகிழ்வளிப்பதாக இருக்கிறது.

ஈழத்தில் நடந்த இன்னல்களை, இன்னமும் நடந்து வருகிற இன்னல்களை எங்கள் படைப்பாளிகளே திறம்படத் தர முடியும் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையுண்டு.  வருங்காலங்களில் எமக்கு நடந்த கொடுமைகளுக்கு நீதி கிடைக்கலாம், இல்லை கிடைக்காமலும் போகலாம். ஆனாலும் எமது வலிகளை உலகுக்குச்சொல்லியே தீரவேண்டும்.  இதற்கான சிறந்த ஊடகமாக சினிமாவே இருக்கப் போகிறது. அதற்கான விளக்குகள் எரியத் தொடங்கி விட்டன.

தனேஸ் கோபால்