July 6, 2020

அனைவருக்கும் வணக்கம். 

பொய்யா விளக்கு திரைப்படத்துக்கு இதுவரை நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி.  இந்த அறிக்கையின் நோக்கம், இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு சம்பந்தமான நிதி நிலை மற்றும் வெண்சங்கு கலைக்கூடத்தின் எதிர்கால முயற்சிகள் குறித்த தகவல்களைச் சரியான முறையில் தெரியப்படுத்துதலாகும்.

ஈழத் தமிழர்களின் கதைகளை வெளியுலகுக்கும் எமது எதிர்கால சந்ததிக்கும் கிடைக்கும் வகை செய்தல்  வேண்டும் என்ற எண்ணத்திலே தான் பொய்யா விளக்கு என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது.  இனவழிப்புப் போரின்போது யுத்த பூமியில் இருந்து மக்களுக்குச் சேவையாற்றிய மருத்துவர் வரதராஜா அவர்களின் கதையினையே, தனேஸ் கோபாலின் திரைக்கதை இயக்கத்தில் நாம் வெளிக்கொண்டு வந்திருந்தோம்.  மருத்துவர் வரதராஜா இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தொடர்ந்து எமது மக்களுக்காகச் சர்வதேச தரப்பில் குரலெளுப்பி வருபவர். தவிர, ஒரு மருத்துவராக யுத்த பூமியில் நிகழ்ந்த பல்வேறு வகையான மனித உரிமை மீறல்களையும், இனவழிப்பினையும் வெளியுலகுக்குப் பக்க சார்பில்லாமல் சொல்லக்கூடிய நிலையில் உள்ளவர். எனவே தான் அவரது கதையினை எமது முதற் தயாரிப்பாக எடுத்துக் கொண்டோம். வெளியிடப்பட்டபோது பார்வையாளர்களினால் மிகவும் பாராட்டப்பட்டமை எமது முயற்சி சரியான பாதையிலேயே பயணித்து உள்ளது என்பதனை உறுதிசெய்தது. முக்கியமாக, இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியதற்காக மருத்துவர் வரதராஜா மற்றும் பலர் எந்தவித நிதிசார் அனுகூலங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதனையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஒரு முழுநீள திரைப்படத்தினைத் தயாரிப்பதிலுள்ள பொருளாதாரச் சிக்கல்களை நாம் உணர்ந்தேயிருந்தோம். இதற்காகப் பல்வேறுபட்ட வணிக, மற்றும் செல்வந்த முதலீட்டாளர்களை அணுகினோம்.  ஆனாலும் ஈழத்திரைப்படங்கள் தயாரிப்பதில் அவர்கள் பல்வேறுபட்ட காரணங்களால் பின் நின்றனர்.  இந்த நிலையில் ஈழத்தில் நடந்த பல்வேறுபட்ட கதைகளினை வெளிக்கொண்டு வருதலுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்கின்ற பொறுப்புணர்ச்சியுடன் வெண்சங்கு கலைக்கூடம் கனடா நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்ட ஒரு கூட்டுத்தாபனமாக ஏற்படுத்தப்பட்டது.  இருபது தமிழ் உணர்வாளர்கள் கூட்டுத்தாபனத்தின் பங்குகளை வாங்குதல் மூலமாக நிதியினைத் திரட்டி $250,000 செலவில் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

ஆரம்ப காட்சிகளைச் சில நகரங்களில் திட்டமிட்டபடி காட்சிப்படுத்தினோம். கடந்த பங்குனி 2020ல் கனடாவில் காட்சிப்படுத்துவதற்கான 14A தணிக்கைச் சான்றிதழும் பெறப்பட்டது.  

உலகம் முழுவதும் திரையிடுதலுக்கான ஆரம்ப கட்ட வேலைகளை நாம் செய்தவண்ணம் இருந்த இந்தச் சமயத்தில் COVID-19 காரணத்தால் உலகமெங்கும் திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இணையம் வழியாக எமது திரைப்படத்தினை மக்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  இந்த வழிமுறையில் மக்களிடம் இலகுவாக எடுத்துச் செல்லலாம் என்று எதிர்பார்த்தோம்.  ஆனால் இந்த வகையிலும் இதுவரை 150 பேர்கள் மட்டுமே $14.95 செலுத்திப் பார்வையிட்டனர்.  இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட திரையிடல்களாலும், மற்றும் ஆதரவாளர்களின் பங்களிப்பினாலும் இதுவரை $32,272 அல்லது மொத்த செலவில் அண்ணளவாக 15% இனை மீளப்பெற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது.  இது ஒரு பின்னடைவே என்ற போதிலும் இன்னமும் பெரும்பாலான மக்கள் பார்க்கவில்லை என்ற வகையில் தொடர்ந்து பயணித்து 50% மான செலவினை மீளப் பெறலாம் என்று வெண்சங்கு கலைக்கூடம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த வருடத்தின் பின்பகுதியில் வேற்றின மக்களிடம் இப்படத்தினை எடுத்துச் செல்லும் நோக்கில் நாம் செயற்பட்டுக் கொண்டிருகின்றோம்.  ஆனாலும், சந்தைப்படுத்துதலுக்கான விளம்பரங்களினைச் செய்வதற்குப் போதிய நிதி இன்மை என்ற நிலையில், இதனை மக்களாகிய நீங்கள் பொது வெளியில் பேசியும் எழுதியும் இந்த முயற்சியில் கைகொடுப்பீர்கள் என்று பெரிதும் நம்புகிறோம்.  

பொய்யா விளக்குக்கு எங்கள் மக்கள் தரும் ஆதரவு இவ்வாறான எம்மக்களின் கதைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சி எடுப்பவர்களுக்கு நம்பிக்கையினைத் தரும்.  இதன் மூலம் மேலும் பல கதைகள் உலகத்தரத்தில் வெளிக்கொண்டுவரப்படும்.  எமது உண்மைகளை, இந்தப் போரினை  நேரடியாகக் அனுபவித்த எமது தலைமுறையின்போதே சரிவர வெளிக்கொண்டு வர முடியும். இதில் நாங்கள் தவறும் பட்சத்தில், போரில் வெற்றி பெற்றவர்களால் தங்களுக்குச் சார்பாக எமது கதைகள் திரிபுபடுத்தப்பட்டுப் பதியப்படும் என்பதில் ஐயமில்லை.   வரலாற்றில் இடம்பெற்ற பெரும் இனவழிப்புகள் திரைப்படங்கள் மூலமாகவே எல்லோருக்கும் சென்றடைந்தது.  யூத, அல்பேனிய, ருவண்டா மக்களின் இன்வழிப்புகள் இன்றும் பேசப்படுகின்ற திரைப்படங்களாக உருவாக்கப்பட்டன.  இவ்வாறான முயற்சிகள் எம் மக்களிடையே இருந்து வரவேண்டும் என்றால் பொய்யா விளக்கு போன்ற எங்கள் முயற்சிகள் வெற்றி பெறல் வேண்டும்.

இனவழிப்பினை மூடிமறைப்பதற்காக இலங்கை அரசு தொடர்ந்தும் செய்துவரும் பொய்யான பிரச்சாரங்களை உடைத்தெறிய பொய்யா விளக்கு போன்ற திரையப்படங்களை உலகளாவியரீதியில் வெற்றி பெறச் செய்தல் எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.  மீண்டும் இப்படியானதொரு முயற்சிக்கு கலைஞர்களும் முதலீட்டாளர்களும் பின்நிற்கும் நிலையினை நாம் தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.

எமது நிதிநிலமைகள் தொடர்பான தரவுகளை நம்பகத்தன்மையுடன் பகிர்ந்து கொள்ள நாம் எப்போதும் தயாரகவே இருக்கிறோம்.  இந்த அறிக்கை எமது தயாரிப்பு சம்பந்தமான ஒரு தெளிவினை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.  

கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் இதுவரையிலும் நாங்கள் மேற்கொண்ட காட்சியிடல் மூலம் மீளப்பெறப்பட்ட நிதியினைச் சாராம்சமாகச் சொல்கிறது.

பொய்யா விளக்கு எம் இனத்தின் பதிவு.  ஈழத்தின் படைப்புக்களை வரவேற்றுக்கொள்ள முடியாதவர்களின் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு,  இதையும் இவ்வாறான எம்கதை சொல்கின்ற இனிவரும் படைப்புக்களையும் வெற்றிபெறச் செய்வது எமது கடமை.  இதனை ஈழத்தில் திரையிடுவதற்கு இனவழிப்பு இலங்கை அரசு சம்மதிக்கப்போவதில்லை.  இதனைப் புலம்பெயர் தமிழர் ஒவ்வொருவரும் பார்த்துவிட்டாலே இதனை வேற்றின மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் தடையின்றி நடைபெற்றுவிடும் .  பார்வையிட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் இதனைப் பற்றி எழுதுங்கள்.  இவ்வாறான பதிவுகளே இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்கும், வெண்சங்கு கலைக்கூடத்தின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கும் வித்தாகும்.  உங்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கும் நாம் செவிசாய்க்கத் தயாரகவே உள்ளோம். 

எங்களுடன் தொடர்புகொள்வதற்கு: contact@whiteconchstudios.com அல்லது www.whiteconchstudios.com என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். 

நன்றி.

இப்படிக்கு,

வெண்சங்கு கலைக்கூடம்