அனைவருக்கும் வணக்கம்
கனடாவின் டொரோண்டோவில் வசித்து வருபவரும், தமிழ் சமூகத்துக்கு பல அறிவார்ந்த நல்ல விடயங்களை செய்து வருபவருமான திருமதி.ராஜி பற்றர்சன் அவர்களின் நேர்காணலில் வைத்திய கலாநிதி.வரதராஜா துரைராஜா அவர்களை பற்றி அறிந்துகொண்டு, அவர் இன்றைய உலக மக்களுக்கும் எதிர்வரும் தலைமுறையினருக்கும் தமிழ் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அறிந்துகொள்ளும் முகமாக ,இறுதி யுத்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை, அவரது நேரடி அனுபவத்தை "பொய்யா விளக்கு" என்னும் ஆவண திரைப்படமாக கனடாவில் வசித்து வரும் இயக்குனர் திரு.தனேஸ் கோபால் தயாரித்துள்ளதை அறிந்தேன்.
பெரும்பாலும் திரைப்படம் பார்ப்பதில் பெரிதாக ஆர்வம் கொண்டவளில்லை. ஆனால் இதை பார்த்தே ஆக வேண்டும் என தோன்ற உடனே https://whiteconchstudios.com/ என்ற வலைதளத்தின் மூலம் $14.95 வாங்கினேன். பணம் செலுத்தியதும் மின்னஞ்சலுக்கு திரைப்படத்தின் இணையதள முகவரியையும் கடவுச்சொல்லையும் அனுப்பிவைக்கிறார்கள்.காணும் உரிமை பெற்று படத்தை பார்த்தேன்.
இனப்படுகொலையின் யுத்த முடிவு நாளான மே 18 க்கு முன்பு மே 15 வரை முள்ளிவாய்க்காலில் தன்னுயிரையும் துச்சமாக எண்ணி மனித உயிர்களை காக்கும் மகத்தான மருத்துவ பணியை பல இன்னல்களுக்கிடையே செய்த வைத்திய கலாநிதி.வரதராஜா அவர்களே இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்,...இல்லை வாழ்ந்துள்ளார் என்பது இத்திரைப்படத்தின் வரலாற்று சிறப்பு.
படம் பார்க்க தொடங்கியவுடன் தொடங்கிய எனது கண்ணீரும் திரைப்படம் முடிந்தும் முடிவில்லாமல் நீண்டது. புலம்பெர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் டாக்டர், துப்பாக்கி மற்றும் பீரங்கி சத்தத்துடன் கனவாகிய நினைவுகளுடன் கண்விழிக்கும் காட்சியில் தொடங்குகிறது திரைப்படம். இனப்படுகொலைக்கு ஆளாகி தாய் மண்ணை , உறவுகளை , உடமைகளை துறந்து ஆறா ரணத்தை மட்டும் மனதில் கொண்டு புலம்பெயர்ந்து உலகம் முழுதும் பரவி இருக்கும் தமிழீழ தமிழ் மக்களின் நிலையை தான் இக்காட்சி முன்வைக்கிறது.நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மானுடம் மீது கருணை கொண்ட கடைசி யுத்த கால காணொளிகளையும் விடயங்களையும் முழுதாக கண்டவர்கள் பெரும்பாலோரார்களின் இன்றைய நிலையையும் இக்காட்சி கண்முன்னே கொண்டுவருகிறது.
இந்த படம் மொன்றியலில் பெரிதாக விளம்பரம் செய்யப்படாமல், பேசப்படாமல் போனது வியப்பாய் தான் உள்ளது.இவ்வளவு தியாக உள்ளமும் அர்ப்பணிப்பும் கொண்டு 70 000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை வாகரை மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து காப்பாற்றி வெளியேற்றி அதன் பின்னர் முள்ளி வாய்க்காலுக்கு தன்னார்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தானாக முன்வந்து மருத்துவ சேவை செய்த ஒரு தமிழரை பற்றிய விழிப்புணர்வு தமிழ் மக்களுக்கு இல்லாமல் போனதை என்னவென்று சொல்வது.
இன்று ஜெனிவா உள்ளிட்ட பல உலக அரங்குகளில் உண்மையை உரக்க சொல்லி தமிழ் இனபடுகொலைக்கு நீதி கேட்டும் மோதல் தவிர்ப்பு வலய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் பல முன்னெடுப்புகளை செய்துவரும் வைத்திய கலாநிதி. வரதராஜா அவர்களின் நினைவு மீட்டலின் மூலம் நம்மையும் தாயகத்தின் முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு செல்கிறார் இயக்குனர். மருத்துவரின் நீண்ட நெடிய வலிகள் மிகுந்த பயணத்தை கோரமான காட்சிகள் இல்லாது,குறியீடுகள் மூலமும் பார்ப்பவர்கள் மனதில் பதிய வைத்திருப்பது அற்புதம். தாயகத்தில் தமிழ் மக்கள் சாதி மத பேதமின்றி ஒற்றுமையாய் இருந்ததை மாசில் வீணையும் பாடல் மூலம் முருகப்பெருமான் , இயேசு , புத்தர் என்ற மூன்று கடவுளின் படங்களை கொண்டு குறியீட்டோடு காட்டியுள்ளார்.
அப்பாவி பொதுமக்களை , பிஞ்சுகளை ,பெண்களை பாரபட்சமின்றி ஈவு இரக்கமின்றி இனவெறி இராணுவம் காவு வாங்கியதை எளிய கட்சி படுத்துதலின் மூலம் கனமாக முன் வைக்கிறார் இயக்குனர் . அப்பாவி பெண்களை புலிகள் சீருடை அணிவித்து சீரழிப்பதையும் அமைதி போதிக்க வந்த புத்தம் இலங்கையில் மட்டும் ரத்தம் குடித்ததையும் போதிய மருத்துவ வசதிகளை அளிக்காமல் அப்பாவி மக்களை கொன்று அழி த்ததையும் மோதல் தவிர்ப்பு வலயம் என உலகத்தையும் அப்பாவி மக்களையும் நம்பவைத்து அளவுக்கதிகமான மக்களை செறிவடைய செய்து,சாட்சிகளற்று அரங்கேற்றிய இனப்படுகொலையையும் காட்சி படுத்துதலில் ஒவ்வொரு மனிதரும் பொருளும் மனிதரும் கனமாக முன் வைத்து சொல்லவொணா சோகத்தில் நெஞ்சை நிறைக்கிறார்கள்.
போதிய மருந்துகள் ,மருத்துவ வசதிகள் உணவுகள் ஏதுமின்றி அடிபட்டவர்களுக்கும் காயம் பட்டவர்களுக்கும் உயிர் வலியுடனும் ரத்த கரையுடனும் மருத்துவம் அளிக்கப்பட்ட வேதனையையும், வாகன எண்கள், மருத்துவ ஆம்புலன்ஸ் எண்கள், திகதி , நோயாளிகள் விவரம் குறிக்கப்பட்ட கரும்பலகை அனைத்திலுமே வரலாற்று முக்கிய நாட்களை குறியீடாக சொல்லி அசர வைத்துள்ளார் இயக்குனர். மிதிவெடி அபாய பகுதியிலும் குண்டு சத்திற்குள்ளும் ரத்த வெள்ளத்திற்குள்ளும் தன்னுயிரை துச்சமாக எண்ணி, தன் நினைவு உள்ளவரை உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய டாக்டர் வரதன் மகத்தான மாமனிதராகவே மனதில் உயர்ந்து நிற்கிறார். மருத்துவத்தில் தமிழ் குலத்துக்கு இன்னுமொரு அடையாளம் என்றே சொல்லலாம்.
கண்முன்னே கண்ட கோரக்காட்சிகளால் மனப்பிறழ்வுடன் வாழும் மனிதன் , இன்று மது போதை, வாள்வீச்சு என மனப்பிறழ்வுடன் வாழும் தமிழ் சமூகத்தின் இன்றைய இளைஞர்களின் நிலையை சுட்டி காட்டி செல்கிறார்.அப்பாவி மக்களுக்காக அர்ப்பணிப்பை தந்த மருத்துவருக்கு தண்ணீர் தர மறுக்கும் மக்களையும் காட்சி படுத்தி கசப்பான உண்மையை உரைக்க செய்துவிட்டார்.
ஒட்டுமொத்தமாக மனிதராய் பிறந்த அதிலும் தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய நமது இளைய தலைமுறையினருக்கும் காட்டப்பட வேண்டிய முக்கியமான ஆவண படம் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இல்லை.
மிகை படுத்தப்படாத, கோரமாய் அல்லாத ஆனால் கனம் மிகுந்த, பொருள் பொதிந்த உண்மையை உலகுக்கு உரைக்க வந்த "பொய்யா விளக்கு" நிச்சயம் சர்வதேச நீதி கேட்கும் போராட்டத்திற்கு வலுசேர்த்து, இழந்த அப்பாவி உயிர்களுக்கும், வாழும் மீதி உயிர்களுக்கும் நீதி கிடைக்க வழிகோலும் என்பது திண்ணம். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாய் ஓரினமாய் இணைந்து மருத்துவரின் முன்னெடுப்புகளை உணர்ந்துகொண்டு ஆதரவு தந்து இத்திரைப்படத்தினை வெற்றியடைய செய்வதன் மூலம் தமிழ் சமூகத்தின் ஓற்றுமையை ஒருமித்த குரலில் உலகுக்கு உரைப்போம்.
உலகின் பல பகுதிகளில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சையை தருகிறது.
தமிழனென்று சொல்லடா!!!!
தலை நிமிர்ந்து நேர்வழியில் ஒற்றுமையாய் நில்லடா!!!!!
நன்றி
இளவரசி இளங்கோவன்
தமிழ் நாடு